×

இதயங்களைக் கொள்ளையடித்த இந்திய டெலிவரிப் பெண்!

ஒரே வீடியோவில் அனைவரின் மனங்களையும் கொள்ளையடித்திருக்கிறார் வித்யா குமாரி. டெல்லியைச் சேர்ந்த டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மலிவால் தனது ட்விட்டரில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் வீல் சேரில் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி டீஷர்ட் சகிதமாக எங்கேயோ உணவு டெலிவரி செய்யச் சென்றுகொண்டிருக்கிறார். அந்த வீடியோவுடன் சில வாசகங்களையும் குறிப்பிட்டிருந்தார் ஸ்வாதி. ‘‘நிச்சயமாக.. வாழ்க்கை கடினமானது. ஆனால் நாம் தோல்வியை ஏற்றுக்கொள்ள கற்கவில்லை. இந்த பெண்ணின் உத்வேகத்திற்கு சல்யூட் செய்கிறேன்’’ என்னும் வார்த்தைகளுடன் இந்த வீடியோதான் தற்போது பல இதயங்களையும் ஈர்த்துவருகிறது. இதனால் அவருக்கே தெரியாமல், ஏன் அந்தக் குறிப்பிட்ட நிறுவனமே கூட அறியாமல் இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி டெலிவரி பெண்ணாக மாறியிருக்கிறார். மகளிர் ஆணையர் வெளியிட்ட வீடியோவில் வித்யா குமாரியின் முகம் சரியாக தெரியாமல் போகவே யார் இந்தப் பெண்? ‘த நேஷன் வான்ட்’ ‘ஸ் டூ நோ’ என்னும் அளவிற்கு பரவத் துவங்கிவிட்டது. இந்த வீடியோவைத் தொடர்ந்து ஜக்வேந்தர் சிங் என்னும் நபர் சமீபத்தில் தான் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் தன்னுடைய ஆர்டர் மிகவும் தாமதமாக வருவதைக் கண்காணித்து ஆர்டர் கொண்டு வரும் நபருக்கு போன் செய்து கிட்டத்தட்ட கத்தித் திட்டியிருக்கிறார். எதிர்முனையில் ஒரு பெண் போன் எடுத்து பேசியவர், ‘சீக்கிரம் வந்துவிடுகிறேன் சார், மன்னிக்கவும்’ எனக் கூறி போனைக் கட் செய்திருக்கிறார். டெலிவரியை பெறச் சென்ற ஜக்வேந்தர் சிங்கிற்கு ஆச்சர்யம். வித்யா குமாரி இன்ஜின் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனத்தின் பின் பக்க உணவு டெலிவரி பையிலிருந்து உணவை எடுத்துக்கொண்டே அவ்வளவு சிரித்த முகத்துடன் ’மன்னிக்கவும் சார், கொஞ்சம் டிராபிக் என்றாராம்’. ஜக்வேந்தர் சிங் என்ன சொல்வது, எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தலை குனிந்து ‘என்னை மன்னிக்கவும்’ எனக் கேட்டிருக்கிறார். இந்த சம்பவத்தைத் தன் இணையப் பக்கத்தில் பகிர்ந்து தன் செயலுக்கு வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார் ஜக்வேந்தர் சிங். இதன்பின் மேற்கொண்டு இணைய உலகத்தால் தேடப்பட்டார் வித்யா குமாரி. சமீபத்தில் இதற்கு அவரே அவரைப் பற்றி மனம் திறந்திருக்கிறார்’ நான் வித்யா குமாரி. பீகார், சமஸ்திபூர் மாவட்டத்தில் இருக்கிறேன். 15 வருடங்களுக்கு முன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததினால் ஏற்பட்ட விபத்தில் என் இடுப்பு எலும்பு உடைந்து போய்விட்டது. அதனால் பாதி உடம்பு செயல்படாமல் போனது. நான் செயல்பட முடியாதவளாக சின்னச்சின்ன வேலைகளுக்குக் கூட பிறரின் உதவி தேவைப்பட வேண்டிய சூழல் உருவானது. என் வாழ்க்கை முழுவதும் குடும்பத்தை நம்பி இருக்க வேண்டியதாக மாறிப்போனது. மேலும் என்னைச் சுற்றி இருக்கும் மக்கள் பேசுவதை கேட்ட போது வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ஓர் உணர்வு. மிகவும் நொந்து போய்கிடந்த வாழ்க்கை. கடைசியாக  கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்த ஒரே விஷயம் ‘என்னை நீயே கூட்டிச் செல், இல்லையேல் ஏதாவது ஒரு நல்ல வழி காண்பி’ என முழுமையான பிரார்த்தனையுடன் கடவுளிடம் கேட்டுக் கொண்டேன். சுமார் 11 வருடங்கள் கழித்து கடவுள் என் வார்த்தையை கேட்டிருக்கிறார். என்னை ‘சண்டிகர் ஸ்பைனல் ரிஹாப்’ அமைப்பிலிருந்து அழைத்தார்கள். அவர்கள்தான் இடுப்பு எலும்பு சிகிச்சை செய்தார்கள்.  சிகிச்சைக்குப் பிறகு சிறந்த உடல் இயக்க பயிற்சிகளும் கொடுத்தார்கள்.  சுதந்திரமாக செயல்படுகிற அளவுக்கு என்னைத் தயார்படுத்தினார்கள்.  எனக்கு வாழ்வதற்கான ஒரு புதிய நம்பிக்கை கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் எல்லா விளையாட்டுகளையும் விளையாட ஆரம்பித்தேன். ஸ்விம்மிங், டென்னிஸ்,  டேபிள் டென்னிஸ், லெஃப்ட் அண்ட் பிளேயர், உள்ளிட்ட பல விளையாட்டுகளிலும் ஆர்வமாக கலந்துகொண்டேன். நான் ஃபேஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ள ஆரம்பித்தேன். இப்போது நான் பிரபல ஃபுட் டெலிவரி நிறுவனத்திலும் வேலை செய்கிறேன், சுயமாக சம்பாதிக்கிறேன். மிகவும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’ எனத் தன்னம்பிக்கை மிளிர பேசுகிறார் வித்யா குமாரி. தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

The post இதயங்களைக் கொள்ளையடித்த இந்திய டெலிவரிப் பெண்! appeared first on Dinakaran.

Tags : Vidya Kumari ,Swati Maliwal ,President ,Delhi Commission for Women ,Delhi ,Dinakaran ,
× RELATED ஸ்வாதி மலிவாலை வயிறு, மார்பு பகுதியில்...